தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. 3 நாட்களுக்கு வழிபாட்டுக்குத் தடை

0 12721
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வருகிற 23 ஆம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வருகிற 23 ஆம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 9 ஆம் தேதி காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments