தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா? - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 9ம் தேதி வரை 10வது முறையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், 11வது முறையாக ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக, மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், 3ம் அலை வராமல் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments