மண்டை மீது கொண்டை வைத்து கொள்ளை..! கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாமால் சிக்கிய மொட்டை திருடன்

0 5955

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக அத்துமீறி, திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், சிறையில் இருந்து வெளியில் வந்து, மொட்டைத் தலையில் விக் வைத்து அடையாளத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் கொள்ளையடித்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளான். 

சென்னை வடபழனியில் கடந்த மாதம் அடுத்தடுத்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. 2 சவரன், 3 சவரன், சில ஆயிரங்களில் பணம் என கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறைவு என்றாலும், மூன்று கொள்ளைச் சம்பவங்களும் ஒரே பாணியில் சற்று வினோதமாக நடந்திருந்ததால் போலீசாரும் சற்று வித்தியாசமாக யோசித்து விசாரித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட மூன்று வீடுகளும் இரட்டை கதவுகளை கொண்டவை என்பதுடன், கொள்ளை நடந்த போது வீட்டில் ஆட்களும் இருந்துள்ளனர். இரவு நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் உறங்கும் நேரத்தில் திருப்புளியை வைத்து இரட்டைக் கதவுகளை சுலபமாக திறந்து லாவகமாக திருடிச் சென்றுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுப் பிடித்தனர்.

பொதுவாக வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் ஆள் இல்லாத வீட்டை கண்காணித்து கைவரிசை காட்டுவார்கள். ஆனால், ஆட்கள் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து திருடும் கொள்ளையர்கள் யார் என தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள் பட்டியலை தேடியதில் சிக்கியவன் அறிவழகன். மொட்டைத் தலையுடன் இருக்கும் அறிவழகன், இம்முறை தலையில் விக் வைத்துக் கொண்டு முக கவசம் அணிந்து தனது அடையாளத்தை மறைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அறிவழகன் சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் உள்ள நகைகளையும் கொள்ளையடித்து சென்றுவிடுவான்.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளையன் அறிவழகன் பெண்களை சீண்டுவதற்கு ஒரு காரணத்தையும் வாக்குமூலத்தில் அப்போது தெரிவித்தான். இது போன்று நடந்ததால் அவமானமாக கருதி புகார் அளிக்க வர மாட்டார்கள் என அவ்வாறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிவித்தான்.

அதன் பிறகு இவ்வழக்குகளில் சிறையில் இருந்து வெளியில் வந்த அறிவழகன் 2019-ல் அம்பத்தூர் பகுதியில் இதே பாணியில் கைவரிசை காட்டிய போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

மீண்டும் வெளியில் வந்து வடபழனி பகுதியில் கைவரிசை காட்டிய நிலையில் கொள்ளையன் அறிவழகனை அவனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் அறிவழகன் இம்முறை வீட்டில் உள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என்கின்றனர் காவல் துறையினர். பழைய பாணியில் ஈடுபட்டால் தன்னை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் தான் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடாமல், தோற்றத்தையும் மறைத்து முடியில்லாத தனது தலையில் விக் வைத்து கொண்டு வந்ததாகவும், அப்படி வந்தும் போலீஸிடம் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான் கொள்ளையன் அறிவழகன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments