ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்..!
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா பதக்கம் பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதியில் பெல்ஜியத்துடன் போராடி தோற்ற இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான இடத்திற்கு நடந்த போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.
ஆட்டத்தின் துவக்கம் முதலே இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. ஒரு கட்டத்தில் சம பலத்துடன் 3 க்கு 3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்தன. பிறகு விளையாட்டில் விறுவிறுப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.
இந்த பதக்கத்தையும் சேர்த்து நடப்பு ஒலிம்பிக்கில் இது வரை இந்தியா ஒரு வெள்ளி 3 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த வரலாற்று வெற்றி இந்திய ஹாக்கியில் புதிய சகாப்தத்தை திறக்கும் என பாராட்டி உள்ளார்.
இந்தியர்களின் கனவை நமது ஹாக்கி அணி நிறைவேற்றி விட்டதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட், உதவி பயிற்சியாளர் பியூஷ் துலே ஆகியோருடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி அவர்களிடம் தமது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இந்தி ஹாக்கி வீர்களிடம் பேசி தமது பாராட்டுக்களை தெரிவித்ததுடன் வரும் 16 ஆம் தேதி இந்திய ஹாக்கி அணியை புவனேசுவரத்தில் வரவேற்க தாம் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
Comments