நீல நிறமாக மாறிய உடல்.. சிறுமியின் உயிரைக் குடித்த கூல்ட்ரிங்ஸ்..!
சென்னையில் காலாவதியான கூல் ட்ரிங்ஸை வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கப்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி தரணி, பெசண்ட் நகரிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை மதியம் அங்கிருந்த மளிகைக் கடையில் Togito Cola என்ற கூல்ட்ரிங்ஸை வாங்கிக் குடித்த சிறுமிக்கு, சில மணி நேரங்களில் வாந்தி ஏற்பட்டுள்ளது.
பின்னர், கைவிரல், நாக்கு பகுதிகள் நீல நிறமாக மாறியதோடு, மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வந்து திடீரென மயங்கி விழுந்ததால், பதறிப்போன உறவினர்கள் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் உடல் நிலை மோசமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியதால், அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக, சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ள போலீசார், முழு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உயிரிழப்பிற்கான மொத்த காரணமும் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுமி குடித்த குளிர்பானம் காலாவதியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாட்டிலில் காலாவதியாகும் தேதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானம் வாங்கப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர். சிறுமி அருந்திய காலாவதியான குளிர்பானம் போன்று மேலும் சில குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காலாவதியான குளிர்பானத்தை விற்றதால் கடை உரிமையாளர் மீதும், குளிர்பான தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட நடவடிக்கைக்கும் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாபார நோக்கத்திற்காக இதுபோன்று தரமற்ற, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர்கள், நுகர்வோராகிய பொதுமக்களும் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் செயல்பட்டு, எந்த தேதிக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் அறிந்து பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் குளிர் பானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் அங்கு பெறப்பட்ட தகவல்களை அவர் ஆவணமாக பதிவு செய்து கொண்டு அறிக்கையாக தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குளிர்பான மாதிரியின் ஆய்வறிக்கை வரும்வரை தொழிற்சாலையை இயங்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Comments