முறைமாமனால் சினேகா எடுத்த விபரீத முடிவு..! உறவுக்குள் வரதட்சனை வில்லங்கம்
உறவுக்கார இளைஞருக்கு செவ்வாய் தோசம் ஆரம்பிப்பதை காரணம் காட்டி, பள்ளி முடித்த கையோடு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 19 வயது புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி பருவத்தில் முறைமாமன் மீது காதல் கொண்டு திருமணம் செய்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமையால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை பனையூரை சேர்ந்தவர் பிரமோத், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஷேர் மார்க்கெட் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சினேகா, திருமணமாகி 9 மாதங்களே ஆகும் நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2 வாரத்துக்கு முன்பு தாய்வீட்டுக்கு சென்றுள்ளார். பெற்றோர் சினேகாவை சமாதானப்படுத்தி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் உருவான பிரச்சனையால் மனம் உடைந்த சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
சினேகாவின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது பள்ளி செல்லும் வயதில் முறைமாமன் மீது மலர்ந்த காதலால் நிகழ்ந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது. சினேகாவின் தந்தையும் தாயாரும் சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் என்று கூறப்படுகின்றது. தாய் வழியில் முறைமாமன் உறவு கொண்ட பிரமோத் மீது படிக்கின்ற காலத்திலேயே சினேகாவுக்கு காதல் மலர்ந்துள்ளது.
சினேகா பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர தயாராக இருந்த நேரம், சினேகாவை பெண் பார்க்க வந்த பிரமோத்தின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு இன்னும் சில மாதங்களில் செவ்வாய் தோசம் தொடங்க இருப்பதால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், இல்லையென்றால் சினேகா 7 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு கதையை கூறியுள்ளனர்...
மேலும், திருமணம் முடித்த கையோடு சினேகா கல்லூரிக்கு சென்று வரட்டும், சினேகா எங்கள் வீட்டு பொண்ணு மாதிரி வரதட்சணையே வேண்டாம், உங்களிடம் இருப்பதை சீராக செய்யுங்கள் என்று கூறி இந்த திருமணத்தை முடித்துள்ளனர். சினேகாவும் திருமணத்துக்கு ஆர்வம் காட்டியதால், 15 சவரன் நகையுடன் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கையில் கொடுத்து கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த அன்று இரவே சீர்வரிசை பாத்திரங்கள் சரியில்லை என்று கூறியதோடு, ஒழுங்கா சமைக்கவாவது தெரியுமா? என்று கேட்டு டார்ச்சருக்கு ஆரம்ப புள்ளி வைத்துள்ளனர்...
திருமணத்தின் போது ரொக்கமாக கொடுத்த 2 லட்சம் ரூபாயில் ஒன்றரை லட்சம் ரூபாயில் புதிதாக பைக் வங்கிக்கொண்ட காதல் கணவர் பிரமோத், மீதி பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதனை இழந்ததால் வரதட்சணை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டு வார்த்தைகளால் சுடத்தொடங்கியதாகவும், பிரமோத் திருமணத்துக்கு பின்னர் தன் மீது சரியாக அன்பு காட்டவில்லை என்று சினேகா வேதனையுடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்...
மேலும் செல்போனை எடுத்து யார் யாருடன் பேசுகிறாய்? எனக்கேட்டு காதல் மனைவி சினேகாவை அடித்து உதைக்க ஆரம்பித்ததால் அவர்களுக்கிடையேயான காதல் கசந்தது. இதனால் 2 வாரங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த சினேகாவை சமாதானம் செய்து அழைத்து செல்வது போல கூட்டிச் சென்ற பிரம்மோத், மீண்டும் செல்போனை வாங்கி யாருடன் பேசி இருக்கிறார்? என பார்த்துள்ளான்.
அண்ணன் உறவு முறை கொண்ட இருவரிடம் பேசியதாக சினேகா கூறிய நிலையில், இதற்காகத்தான் உங்கள் வீட்டுக்கு சென்றாயா? எனக் கேட்டு நாகூசும் வார்த்தைகளால் திட்டியதால் தனது மகள் சினேகா தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை தேடிக் கொண்டதாக தந்தை ரவி போலீசில் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த 9 மாதத்திற்குள் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாப்பிள்ளை உறவாயிருந்தாலும், அசலாக இருந்தாலும் பெண்ணே விரும்பினாலும், பக்குவமில்லா வயதில் நடக்கின்ற அவசர திருமணங்கள் இது போன்ற விபரீத சம்பவத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.
Comments