அந்த 50 பேரும்.. அக்காள் மகள் சாலினியும்..! முகநூல் காதல் விபரீதம்
சேலத்தில், கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு 108 ஆம்புலன்சை அழைத்த மனைவி போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அந்த பெண்ணுடன் முகநூல் தொடர்பில் இருந்த 50 ஆண் நண்பர்களை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்
சேலத்தைச் சேர்ந்த 39 வயதான பிரபு என்பவர், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே வாழைஇலை வியாபாரம் செய்து வந்தார். பிபிஏ படித்த அக்காள் மகளான 24 வயதான சாலினியை, கடந்த 4 வருடத்திற்கு முன்பு பெற்றோர் பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்த சாலினி, கொள்ளையர்கள் கணவனைத் தாக்கி விட்டதாக கூறி சத்தமிட்டபடியே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சோதித்துப் பார்த்தபோது பிரபு இறந்திருப்பது தெரியவந்தால், போலீசில் தகவல் சொல்லும்படி கூறிவிட்டு சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதன் பிறகு சாலினி உறவினர்கள் உதவியுடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் தனது தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார். கழிவறையில் கணவர் மயங்கிய நிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்ததாகவும், அவர்கள் வந்து பிரபு இறந்து விட்டதாகக் கூறி சென்றதாகவும் சொல்லி கதறி அழுதார்.
இதையடுத்து, பிரபுவின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ஆனந்த் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக சாலினியின் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் சாலினி தினமும் 20 பேர் முதல் 30 பேரிடம் செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது. சாலினியின் பேஸ்புக்கை பார்த்தபோது, 50 ஆண் நண்பர்களிடம் பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா கேள்விக்கும் அழுதபடியே பதில் அளித்த சாலினியை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முகநூல் நண்பருக்கு கொலையில் தொடர்பிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணத்துக்கு முன்பு ஸ்மார்ட் போனையே பார்க்காத அக்காள் மகள் சாலினி மீது கொண்ட அன்பின் பரிசாக பிரபு வாங்கிக் கொடுத்த ஸ்மார்ட் போனே அவரது வாழ்க்கைக்கு எதிரியாக மாறி உள்ளது.
முப்பொழுதும் முகநூலில் மூழ்கி கிடந்த சாலினியுடன் 50 ஆண் நண்பர்கள் வரை சகவாசம் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. பலர் சாலினியுடன் ஹாய் சொல்லி அழகை வர்ணிப்பதோடு நிறுத்திக் கொள்ள, திருச்சி உறையூரை சேர்ந்த ஆண் நன்பரோ சாலினியின் வீடு தேடி வரும் அளவுக்கு நெருங்கி பழகி உள்ளார்.
மாதத்திற்கு இருமுறை என பிரபு வெளியூர் செல்லும் நாட்களில், சீசனுக்கு வந்த வேடந்தாங்கல் பறவை போல வீட்டிற்கு வந்து சாலினியுடன் தனிமையைக் கழித்து சென்றுள்ளான் காதலன்.
இந்த தகவல் அரசல் புரசலாக கணவன் பிரபுவின் காதுகளுக்கு எட்டியதும், தான் வாங்கி கொடுத்த ஸ்மார்ட்போனை பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
கணவனுக்கு தெரியாமல் அட்வான்ஸ் மாடல் செல்போன் ஒன்றை வாங்கி தனது ஆண் நண்பர்கள் உடனான தொடர்பை நீடித்து வந்ததால் அவர்களுக்குள் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நிமிர்ந்து பேசிய சாலினியைக் கண்டிக்க இயலாமல், வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டு இலைக் கடையிலேயே தங்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார் பிரபு.
இந்த நிலையில் தனது காதலனாக மாறிய திருச்சி இளைஞனிடம் கணவன் தொல்லை குறித்து தெரிவிக்க, தங்களுக்கு இடையூறாக இருந்த பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
ஒரு வாரம் பிரபுவிடம் அன்பை பொழிந்து வீட்டில் படுக்க வைத்த சாலினி, தாங்கள் தீட்டிய சதித்திட்டத்தின் படி திங்கட்கிழமை நள்ளிரவு தனது காதலனை செல்போனில் பேசி வரவழைத்து கதவை திறந்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளாள்.
பின்னர் இருவரும் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பிரபுவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததும், அதன்பின் காதலனை தப்பிக்க விட்ட சாலினி கதறி அழுது கொள்ளை நாடகம் ஆடியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
திருச்சியைச் சேர்ந்த முகநூல் காதலனை தேடி தனிப்படை விரைந்துள்ள நிலையில், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சாலினியுடன் சகவாசம் வைத்திருந்த முக நூல் நண்பர்கள் 50 பேரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், முகநூல் காதலன் காமராஜை தேடி திருச்சி விரைந்த தனிப்படை போலீசார், அவனை கைது செய்து சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சாலினியுடன் சகவாசம் வைத்திருந்த முக நூல் நண்பர்கள் 50 பேரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
Comments