அரிசி மூட்டையையே சேம்பிளாக தூக்கிய களவாணி பயபுள்ள..!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியில் தெரிந்தவர் போல பேசி பல்வேறு மளிகை கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை அபேஸ் செய்த கில்லாடி கொள்ளையன், பாதிவிலைக்கு அரிசி மூட்டைகளை விற்று போலீசில் சிக்கியுள்ளான்.
சினிமா ஒன்றில் நடிகர் வடிவேலு சேம்பிள் பார்ப்பதாக கூறி அரிசி வாங்கிச்சென்று சொந்தமாக மளிகைகடை போடுவார். அதே பாணியில் மூட்டை மூட்டையாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏமாற்றி வாங்கிச்சென்ற மர்ம ஆசாமி ஒருவன் பாதி விலைக்கு அரிசி மூட்டைகளை விற்று போலீசில் சிக்கியுள்ளான்...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரிசிக்கடைகளுக்கு பெரிய மனிதர் போல டிப் டாப்பாக சென்ற மர்ம ஆசாமி ஒருவன் தன்னை செல்வாக்கு மிக்க மனிதர் போல காட்டிக் கொண்டு அரிசிமூட்டைகளின் விலையை விசாரித்து விட்டு , தனது அருமை பெருமைகளை எல்லாம் பேசி கடைக்காரரின் மூளையை சலவை செய்து, பணம் எடுத்துவருவதாக கூறி அரிசி மூட்டையை எடுத்துச்செல்லும் அந்த நபர் பணம் கொடுக்காமல் கம்பி நீட்டிய சம்பவம் தொடர்பாக போலீசுக்கு 10க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளது.
அதே போல சில மளிகை கடைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அந்த டிப் டாப் பெரிய மனிதர் பணம் கொடுக்காமல் தப்பியுள்ளார், இதையடுத்து அந்த டுபாக்கூர் பெரியமனிதரை சுற்றிவளைக்க டி.எஸ்.பி பொன்ரகு உத்தரவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் குகன் தலைமையிலான காவல்துறையினர் . அந்த பகுதியில் டிப் டாப் கேடி கைவரிசை காட்டாத அரிசி கடைகள் மற்றும் மளிகை கடைகளை பட்டியலிட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
அவற்றில் ஒரு கடைக்கு அந்த மர்ம ஆசாமி வந்து தனது அருமை பெருமைகளை எல்லாம் சொல்லி, தான் அந்தபகுதியில் தொழில் செய்வதாக கூறியதோடு மீண்டும் வருவதாக கூறிச் சென்ற தகவல் போலீசுக்க தெரியவந்தது, இதையடுத்து எப்படியும் அரிசி மூட்டையை வாங்க அவன் அங்கு வருவான் என்று எஸ்.ஐ.குகன் தலைமையிலான போலீசார் அங்கு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் உதவி ஆய்வாளரின் பாட்டி காலமானதாக தகவல் வந்தது, தான் அங்கு சென்று விட்டால் அரிசி மூட்டை களவாணி தப்பி விடுவான் என்பதால், பாட்டியின் சாவுக்கு கூட செல்லாமல் மாறுவேடத்தில் அங்கேயே காத்திருந்துள்ளார் எஸ்.ஐ.குகன்..!
அவர் கணித்த படியே அங்கு வந்த டிப் டாப் கேடி, அந்த அரிசிகடையில் நீண்ட நேரம் பேசிவிட்டு ஒரு அரிசி மூட்டையை எடுத்துக் கொண்டு செல்ல முயன்ற போது சாதாரண உடையில் இருந்த போலீசார் அவனை சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அந்த டிப்டாப் கேடி மேலவளவு கிராமத்தை சேர்ந்த செல்வப்பாண்டி என்பதும் கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி தவித்ததால் இதே பாணியில் கடைகடையாக கொள்ளையடித்து வீட்டு தேவைக்கு போக மீதியுள்ள அரிசி மூட்டை மற்றும் மளிகை பொருட்களை பாதிவிலைக்கு விற்று வந்ததாக தெரிவித்தார்.
அவனது வீட்டில் இருந்து 10 மூட்டை அரிசி , 20 லிட்டர் சமையல் எண்ணை மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கைப்பற்றினர். சாமர்த்தியமாக துப்புதுலக்கி மோசடி ஆசாமியை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
அதே நேரத்தில் அரிசிகடைக்காரர்கள் கவனமாக இல்லாமல் இது போன்ற நபர்களிடம் நம்பிக்கை வைத்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.
Comments