வீடியோ காலில் பதறித்துடித்த கர்ப்பிணி பெண்..! காப்பாற்றுவாரா கலெக்டர்...?
மராட்டிய மாநிலத்தில் கணவனால் அடித்து துன்புறுத்தப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் கதறி அழுத நிலையில், தங்கள் பெண்ணை மீட்டு தரும்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்களம் கிராமத்தை சேர்ந்த ராமன் - வெள்ளையம்மாள் தம்பதியின் மகள் பவித்ரா, 23 வயதான பவித்ராவுக்கும், சிவகங்கை மாவட்டம் முசுந்தரம் பட்டியை சேர்ந்த முத்துச்செல்வனுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மும்பை அருகே ராய்காட்டில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த முத்துச்செல்வன் திருமணத்துக்கு பின்னர் தான் மட்டும் மகராஷ்டிரா மாநிலம் ராய்காட்டுக்கு சென்றுவிட்டார். சொந்த ஊருக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து மனைவியை சந்தித்து சென்றுள்ளார்
முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த பவித்ரா மீண்டும் கர்பமானார், தன்னை அழைத்து செல்லாததால் கணவன் முத்துசெல்வன் மீது பவித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பவித்ரா கர்ப்பமானதால் முத்துச்செல்வனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் உருவான வாக்குவாதத்தின் காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியான பவித்ராவை, ஒரு வயது குழந்தையுடன் முத்துச்செல்வன் உடன் ராய்க்காடிற்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.
அங்கு சென்ற இடத்தில் முத்து செல்வனுக்கும், பவித்ராவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பவித்ராவை அடித்து உதைத்த முத்துச்செல்வன் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இதனால் பயந்து போன பவித்ரா, மொழி தெரியாத மாநிலத்தில் யாரிடம் உதவி கேட்பது என்று தவித்துள்ளார். பின்னர் தனது தந்தையின் செல்போனுக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட பவித்ரா, கணவர் முத்துச்செல்வன் அடித்து உதைப்பது குறித்தும் , தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் கண்ணீர் விட்டு கதறியதோடு, தன்னையும் குழந்தையையும் மீட்டுச்செல்லும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த வீடியோ ஆதாரத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்த, பவித்ராவின் பெற்றோர், தங்கள் மகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியரும் தக்க நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.
Comments