அமளி, கூச்சல் குழப்பம் மூலம் நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் குற்றச்சாட்டு
அமளிகளால் அடுத்தடுத்து நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் ஜனநாயகத்திற்கு இழுக்கு என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேசமயம் நாடாளுமன்றத்திற்குள் எதிர்ப்பைத் தொடர முடிவு செய்துள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ராகுல்காந்தி தலைமையில் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கடந்த 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிரொலித்து வருகிறது. இதேபோல, புதிய வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. திரிணமூல் எம்.பி. ஒருவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை பறித்து, கிழித்தெறிந்தது மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுகிறார்களா, கூட்டுப்பொரியல் செய்கிறார்களா என மற்றொரு திரிணமூல் எம்.பி. ட்வீட் செய்தது ஆகியவற்றை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் பேசியுள்ளார். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் செயல் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அமளிகளால் அடுத்தடுத்து அவை நடவடிக்கைகளை முடக்குவது ஜனநாயகத்திற்கு இழுக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்திய அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் தனியே ஆலோசனை நடத்தினர். காலை உணவுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில் காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இந்த சக்தியை ஒருங்கிணைப்பது ஒன்றே முக்கியம் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ராகுல்காந்தி தலைமையில் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.
பின்னர் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்த நிலையில், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
Comments