தீரன் சின்னமலை நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756ஆம் ஆண்டு பிறந்தார். தீர்த்தகிரி எனும் இயற்பெயர் கொண்ட அவர், இளம் வயதிலேயே போர்க்கலையில் மிகவும் சிறந்தவராய் விளங்கினார். அப்போது கொங்குநாட்டை மைசூர் மன்னர் ஆட்சி செய்ததால், கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசிற்குச் சென்றது.
அந்த வரிப்பணத்தைப் எடுத்து ஏழைகளுக்கு விநியோகித்த தீர்த்தகிரியிடம், “நீ யார்?" என்று கேட்டபோது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை தடுத்ததாகச் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அது முதல் தீர்த்தகிரிக்கு சின்னமலை என்ற பெயர் ஏற்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிப் படையினர் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட அவர், 1801ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும் வெற்றி பெற்றார். போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து, சங்ககிரிக் கோட்டையில் 1805ஆம் ஆண்டில், ஆடி 18ஆம் நாளில் தூக்கிலிட்டனர்.
தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
Comments