கொரோனா ஸ்பிரட்டர்ஸ்..! ஓடவோ, ஒளியவோ, முடியாது; போலீஸ் மாஸ்டர் பிளான்..! 3வது அலையை தடுக்க 30 பேர்..!
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் 15 நாட்களில் எங்கெங்கு சென்று வந்தனர் என்பதை கண்டறிய 30 பேர் கொண்ட சைபர் கிரைம் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா 3 வது அலையின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, செல்போன் சிக்னல் உதவியுடன் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கொரோனா... உலக மக்களை உலுக்கி எடுக்கும் இந்த உருமாறி உயிர்கொல்லி அலை அலையாய் தாக்கி மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றது.
3வது கொரோனா அலையை எதிர்கொள்ள, முதல் கட்டமாக சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 9 வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளது. கோவையில் பால், காய்கறி தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் திறக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2 வது அலையில் கொரோனா பரவலுக்கு காரணமான தொடர்பாளரை கண்டறிவதில் ஏற்பட்ட தொய்வை சரிக்கட்டும் வகையிலும், முதல் அலையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் நோயாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட விவரங்களை விட துல்லியமான தரவுகளை பெற்று கொரோனாவின் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் வகையிலும் சென்னை பெரு நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 30 பேர் கொண்ட கொரோனா வார் ரூம் ஒன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதில் சைபர் குற்றப்பிரிவில் கைதேர்ந்த காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கியபணி, பரிசோதனையில் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர் கொடுக்கின்ற செல்போன் நம்பர் அவருடையதுதானா ? கடந்த 15 தினங்களில் அவர் எங்கெங்கு சென்று வந்தார்? யார் யாரை சந்தித்தார்? எந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டார் ? அவருடன் தொடர்பில் இருந்த இருக்கும் நபர்கள் யார் ? கடைசியாக அவர் எங்கு சென்றார் ? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவரது செல்போன் சிக்னல் மூலம் சேகரித்து அதனை சென்னை மாநகராட்சிக்கு வழங்கும் முக்கிய பொறுப்பை மேற் கொண்டு வருகின்றனர்.
முதல் அலையின் போது நோயாளியிடமே கேட்டு பெற்றதில் பலர் தவறான தகவலை அளித்ததாகவும், 2 வது அலையின் போது பலர் வேறு ஒருவரின் செல்போன் எண்ணையும், போலி முகவரியையும் கொடுத்தது போன்ற சில நிகழ்வுகள் அரங்கேறியதாலும் இந்த சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற அண்டை மாவட்டங்களிலும் சென்னை காவல்துறையின் எல்லை இருப்பதால் போலீஸ் உதவியுடன் இந்த கண்காணிப்பு பணி முழுமையாக ஒங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறபடுகின்றது.
30 பேர் கொண்ட இந்த கண்காணிப்பு குழுவை வழி நடத்தும் பொறுப்பை, மத்திய குற்றபிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலும் இங்குள்ள தொற்றாளர்கள் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து சென்னை பெருநகர காவல்துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இனி கொரோனா ஸ்பிரட்டர்ஸ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சுட்டிக்கட்டும் காவல்துறையினர் மக்கள் ஒத்துழைத்தால் போதும் கொரோனாவின் 3 வது அலையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
Comments