ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் அரையிறுதி போட்டியில், பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, போராடி தோல்வியடைந்தது.
1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கம் வென்றது. அது ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ந்து 8ஆவது முறையாக வென்ற தங்கம். ஆனால், அதன் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழையவே இல்லை.
இந்த 41 ஆண்டு கனவு, இந்த முறையாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன், டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெல்ஜியம் அணியை இந்தியா எதிர்கொண்டது. பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, இந்தியர்களின் வியூகத்திற்குள் நுழைந்து, பெனால்டி கார்னர்களை பெறுவது என்ற உத்தியைப் பின்பற்றி விளையாடியது.
முடிவில் 2-க்கு 5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ஆடவர் ஹாக்கியின் மற்றொரு அரையிறுதியில் தோற்கும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இதனிடையே, போட்டியை தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்த பிரதமர் மோடி, வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கமே எனக் குறிப்பிட்டுள்ளார். ஹாக்கி அணியின் கேப்டன் மான்பிரீத் சிங்குடனும் தொலைபேசியில் பேசிய பிரதமர், அணி சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார்.
Comments