’தமிழ்நாடு சட்டமன்றத்தின்..’ பெருமைமிகு வரலாறு..!
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. சட்டமன்றத்தின் பெருமையையும், அங்கு வீற்றிருந்த தலைவர்களையும், நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சட்டங்களையும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
1919ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில், சென்னை மாகாண மன்றத்திற்கு 1920ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது. 1921-ம் ஆண்டு, ஜனவரி 12-ம் தேதி சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.சுப்பராயலுவைத் தொடர்ந்து, பனகல் ராஜா, பி. சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி. ராசன் உள்ளிட்ட நீதிக்கட்சியின் முதலமைச்சர்கள் 17 ஆண்டுக் காலம் பதவி வகித்தனர்.
நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் பெண்களும் வாக்களிக்கலாம் என்றும், பிரதிநிதித்துவம் பெறலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாகவே 1927ம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் உறுப்பினராக தேர்வானார்.
1957-58ம் ஆண்டுகளில் அப்போதைய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் தனது பட்ஜெட் உரையை முதன் முதலில் தமிழில் வாசித்தார். 1967-68ம் ஆண்டுகளில் சபாநாயகராக இருந்த சி.பா. ஆதித்தனார், பேரவை நிகழ்வு தொடங்கும் முன் திருக்குறள் வாசிப்பதைத் தொடங்கி வைத்தார். 1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சியின் போது, சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பதினாறாவதாக, தமிழ்நாட்டில் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய கலைஞர் கருணாநிதியின் முழுஉருவப்படம் திறக்கப்படுகிறது.
1977ல் காமராஜரின் உருவப்படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர் இன்று கலைஞரின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.
Comments