இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு- நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் படுகாயம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் படுகாயமடைந்த மீனவரை நாகை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அக்கரைப்பேட்டையை சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 28-ஆம் தேதி கலைச்செல்வன் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கலைச்செல்வனுக்கு தலையின் இடதுபக்கத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவரை மீட்ட சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில காயமடைந்த மீனவரை சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் தெரிவித்தார்.
Comments