கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவில்களில் வழிபாட்டுக்குத் தடை, நீர்நிலைகளில் நீராடவும் தடை

0 5352

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகப் பெரிய கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்குப் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்கள், அம்மன் கோவில்களில் இன்று முதல் ஆகஸ்டு 9 வரை பொதுமக்கள் பொதுமக்கள் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடபழனி முருகன் கோவில் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அறியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூடப்பட்ட வாயிலுக்கு வெளியே நின்று வழிபட்டுச் சென்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வல்லக்கோட்டை, குமரக்கோட்டம், இளையனார் வேலூர் ஆகியவற்றில் உள்ள முருகன் கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அறியாமல் அதிகாலையிலே வழிபாட்டுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவில் மூடப்பட்டுப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆடிக் கிருத்திகை, ஆடிப்பெருக்கையொட்டி மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவே மூன்று நாள் கோவில் மூடப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில், சுவாமிமலை முருகன் கோவில், உப்பிலியப்பன் கோவில் ஆகியன மூடப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் வாயிலுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

ஆடிப்பெருக்கையொட்டி ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காவிரி பவானி ஆறுகள் ஒன்றுகூடும் பவானிக் கூடுதுறையில் புனித நீராடவும், சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தவும், பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, காளிங்கராயன் அணை ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுக்காக வந்திருந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோவில் வாயிலில் நின்று வழிபாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் வழிபடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடை விதித்ததை அறியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்களில் சிலர் சாலையோரங்களில் பொங்கலிட்டு வழிபட்டனர். வெளியூர்களில் இருந்து பேருந்துகளிலும் வாகனங்களிலும் இருக்கன்குடிக்கு வந்த பக்தர்களைக் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் சாத்தூர் - இருக்கன்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சங்கரன் கோவில் சங்கரநாராயணர் கோவிலில் இன்று முதல் ஆகஸ்டு 3 வரை பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வந்த பக்தர்களைக் கோவில் தோரணவாயில் முன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில் மூடப்பட்டுள்ளதால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இக்கோவிலுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அங்குள்ள ஆஞ்சநேயர், நாமகிரி தாயார், நரசிம்மர், அரங்கநாதர் கோயில்களில் வரும் 3ஆம் தேதி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லையென அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி கும்பிட்டு சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments