90வயதிலும் கிராமம் கிராமமாக நடந்து சென்று இட்லி விற்பனை... இளையதலைமுறையினருக்கு உழைப்பின் மகிமையை விளக்கும் மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 90 வயதைத் தொடும் மூதாட்டி ஒருவர் கிராமம் கிராமமாக நடந்து சென்று மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து பிழைத்து வருகிறார். "உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் மூதாட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த தோப்புவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 89 வயதான மூதாட்டி உச்சிமாகாளி. 25 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துபோக, வெளியூருக்குப் பிழைக்கச் சென்ற ஒரே மகனும் திசையன்விளை பகுதியில் கூலி வேலைகள் கிடைத்ததால் அங்கேயே தங்கிவிட, மூதாட்டி உச்சிமாகாளி தனிமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
பொதுவாக 50 வயதைக் கடந்த கிராமப்புற மனிதர்கள் ஒரு சிலருக்கு தங்களது ஊரைவிட்டு வெளியூரில் சென்று தங்க மனம் இடம் தராது. "செத்தாலும் இந்த மண்ணுலதான் சாவேன்" என்று கூறுபவர்கள் உண்டு. அந்த வகையில் தன்னோடு வந்து தங்கிவிடு என்று அழைத்த மகனோடு செல்ல மனமில்லாமல் ஊரோடு தங்கிவிட்ட உச்சிமாகாளி, வருமானத்துக்கு வழியென்ன என்று யோசித்தபோது சிற்றுண்டி வியாபாரம் கைகொடுத்தது.
நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து பாத்திரங்களை சுத்தம் செய்து, காய்கறிகளை நறுக்கி, சாம்பார், சட்னி உள்ளிட்டவற்றை தயார் செய்கிறார். ஆட்டுக்கல்லில் அரிசி, உளுந்து மாவை அரைத்து, விறகு அடுப்பில் இட்லியை வேகவைத்து, அனைத்தையும் தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்குகிறார். தோப்புவளம், கந்தசாமிபுரம், காலன்குடியிருப்பு, தளவாய்புரம் என நடந்தே செல்லும் மூதாட்டியின் வருகைக்காக அவரது வாடிக்கையாளர்களுடன் பாத்திரங்களுடன் காத்திருக்கின்றனர்.
ஒரு இட்லி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என விற்பனை செய்து வந்த மூதாட்டி, தற்போதுதான் 3 ரூபாயை தொட்டிருக்கிறார். சுத்தமாகவும் பாரம்பரிய முறையிலும் தயாராகும் உச்சிமாகாளியின் இட்லிக்குத் தனிச்சுவை இருப்பதாகக் கூறுகின்றனர் அவரது வாடிக்கையாளர்கள்.
உச்சிமாகாளியின் உடல்தான் தள்ளாட்டம் கண்டுள்ளதே தவிர, அவரது மனம் உறுதியோடுதான் இருக்கிறது. 20 வயதைத் தொடுவதற்குள் பணத்துக்காக திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி என திசைமாறி ஓடும் இளசுகளுக்கு ஒரு பாடமாக எழுந்து நிற்கிறார் 90 வயதைத் தொடும் மூதாட்டி உச்சிமாகாளி.
Comments