கொல்லப்பட்ட மருத்துவ மாணவர்கள்... சிதைக்கப்பட்ட பெற்றோரின் கனவு: மதுவால் மரணிக்கும் மனிதநேயம்

0 8190

சிவகங்கையில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதைத் தட்டிக் கேட்டதற்காக குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்தார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலங்களாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி காண்போரை கலங்கடித்தது. 

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர்.  கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊரிலேயே தங்கி ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இருதயராஜிற்கு சொந்தமான விவசாய நிலம் அண்ணாமலை நகரில் உள்ளது. அங்கு சிலபேர் மது அருந்திக்கொண்டும் தோட்டத்து வீட்டை அடித்து உடைத்துக் கொண்டும் அட்டகாசம் செய்வதாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இருதயராஜுவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்ற இருதயராஜ், மது அருந்திக் கொண்டிருந்தவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். 7 பேர் கொண்ட அந்த கும்பல், போதையில் அவர்களோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருதயராஜின் மூத்த மகன் கிறிஸ்டோபர் அங்கு நடந்தவற்றை தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அந்த கும்பல் ஆத்திரமடைந்து மறைத்துவைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்டோபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற ஜோசப் சேவியருக்கும் இருதயராஜுவுக்கும் கத்திக் குத்தும் அரிவாள் வெட்டும் சரமாரியாக விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழ, கிறிஸ்டோபரின் செல்போனை எடுத்துக் கொண்டு கொலைகார போதை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜோசப் சேவியர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காயங்களுடன் இருதயராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜோசப் சேவியராவது பிழைப்பார் என்று கண்ணீருடன் காத்திருந்த அவரது தாய், மகனின் உடலை சுமந்து வந்த ஸ்ட்ரெச்சர் பின்னால் கதறியவாறே ஓடிய காட்சி காண்போரை கலங்கடித்தது.

சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சாதாரணமாக மது அருந்த வருவோர் ஏன் கத்தி, அரிவாளுடன் வர வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ள நிலையில், வேறு ஏதேனும் திட்டத்துடன் வந்த கூலிப்படையினரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மருத்துவர்களாகி பலரது உயிரைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய பிள்ளைகள் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதே என்பதை நினைத்து அவர்களது பெற்றோரும் உறவினரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments