பார்வையற்ற நிலையிலும் மகளின் படிப்பிற்காக போராடும் பனை மனிதர்...! நேசக்கரங்கள் நீளுமா.?
இரண்டு கண்களும் தெரியாத நிலையிலும் பனை மரம் ஏறி குடும்பத்தை காப்பாற்றிய பார்வையற்ற மாற்றுதிறனாளி ஒருவர், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தனது இரு மகள்களின் படிப்பு செலவிற்காக போராடி வருகின்றார். அரசின் நேசக்கரங்களிடம் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் காய்ப்படைந்த கரங்களின் ஏக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் , வெள்ளரி ஓடை கிராமத்தில் உள்ள சிறிய ஓட்டு வீட்டில் மனைவியுடன் வசிக்கின்ற முருகாண்டியின் செயல்பாடுகளை பார்ப்போருக்கு அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியாது. அந்த அளவிற்கு சத்தங்களை நுன்னிப்பாக கவனிப்பது மற்றும் தொடு உணர்தல் மூலம் தன்னுடைய அன்றாட வேலைகளை தடையின்றி செய்துவருகின்றார் .
செங்கல் சூலைகளுக்கு விறகிற்காகவும், ஓட்டு வீடுகளின் உத்திர பயன்பாட்டுக்காகவும் கற்பக தருவான பனைமரங்கள் வேரோடு வெட்டி அழிக்கப்பட்டதன் விளைவு பனை ஏறும் வேலை சீசனாக மாறிபோனதால் உழைப்பிற்கு வேறுவழியின்றி அரசின் 100 நாட்கள் வேலைதிட்டத்திற்கு சென்று கிடைத்த வேலைகளை செய்து வந்தார். அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி பனைமரம் ஏறியும் குடும்பத்தை காப்பாற்றிவந்த முருகாண்டிக்கு, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு 100 நாட்கள் வேலையை முடக்கியதால் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார்.
அரசு வழங்கிய இலவச அரிசியை கொண்டு தங்கள் குடும்பத்தின் அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டாலும், கடந்த 3 வருடங்களாக மூத்த மகளுக்கு சென்னை கல்லூரியில் பொறியியல் படிக்க நிதி உதவி செய்த நல்ல மனிதரும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இறுதி ஆண்டு உதவ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு மகள் தனியார் உதவியுடன் நர்சிங் படித்துவருவதாக தெரிவித்த முருகாண்டி, தனது மகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வட்டிக்கு வாங்கி செலுத்திய கடன்கள் அவரது நிம்மதியை இழக்க செய்துள்ளது. முன்பு போல முறையான வேலை இல்லாததால் தான் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிக் கட்ட இயலவில்லையே என்று வேதனை கொள்கிறார் முருகாண்டி
இந்த கஷ்டகாலத்தில் அரசு தனது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முருகாண்டி, தனது மகள்கள் இருவரும் நன்றாக படிக்க கூடியவர்கள், அவர்கள் படிப்பை முடித்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பணிவாய்ப்பை தமிழக அரசு வழங்கினால் எங்கள் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார்..!
தகப்பனின் வலி உணர்ந்த மகள்கள் கிடைப்பது வரம் என்றால் அந்த மகள்களுக்காக தன்னுடைய வலிகளை சுகமான சுமையாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு தகப்பனும் வாழும் கடவுள்..! அதே நேரத்தில் தங்கள் மகள்களின் கல்விக்காக பணம் கொடுத்து உதவிய கரங்களை நன்றியோடு நினைவு கூறும் இந்த காய்ப்படைந்த கரங்கள் வாழ்வாதாரத்திற்க்கு அரசின் நேசங்கரங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ..!
Comments