கொரோனா பரவல் அச்சம் ; கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தத் தடை

0 8930
கொரோனா பரவல் அச்சம் ; கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தத் தடை

கொரோனா பரவல் அச்சம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், ஆடிப்பெருக்கையொட்டி நீர்நிலைகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி முருகன் கோவில், கந்த கோட்டம் கந்தசாமி கோவில், சூளை அங்காள பரமேஸ்வரி கோவில், பாடி படைவீட்டம்மன் கோவில், வில்லிவாக்கம் தேவி பாலியம்மன், இளங்காளியம்மன் கோவில் ஆகியவற்றில் ஆகஸ்டு 1 முதல் 9 முடிய பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆகியவற்றில் ஆகஸ்டு 2 முதல் 8 வரை நடைபெறவிருக்கும் ஆடிக் கிருத்திகை நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சியில் ஆடிப்பெருக்கையொட்டி, மலைக்கோட்டை, திருவரங்கம், சமயபுரம், உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருவானைக்காவல், வயலூர் உள்ளிட்ட கோவில்களில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை. அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையிலும், நீராட திருச்சி ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

ஆடிப்பெருக்கு நாளில் ஈரோடு மாவட்டத்தில் பவானிக் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், சித்தோடு காலிங்கராயன் அணைக்கட்டு,  கொடிவேரி அணை, பவானிசாகர் அணை, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய இடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது. 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டமாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாகச் சென்று மாலை அணிவிக்க எந்தத் தடையும் இல்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்டு 4 வரை ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி இல்லை.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடத்தவும், பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3ஆம் நாள் இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆகஸ்டு 4ஆம் நாள் மாலை 6 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும் எனக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டூர் அணைப் பூங்காவில் ஆகஸ்டு 1 முதல் 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments