நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் ; சில தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் +1 பாடங்கள் புறக்கணிப்பு

0 14806
நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் ; சில தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் +1 பாடங்கள் புறக்கணிப்பு

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பில் தங்கள் பிள்ளைகளுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறைகூறி, சென்னை உள்ளிட்ட சில இடங்களில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து தலா 30 சதவீதமும், பன்னிரண்டாம் வகுப்பு யூனிட் தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு நாடு முழுவதும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த  முடிவுகளில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி, சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சம்பந்தப்பட்ட சில தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பிள்ளைகள் பத்தாம் வகுப்பிலும், அதேபோல 12-ஆம் வகுப்பு யூனிட் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்ததாகவும் ஆனால் தற்போது கணக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள +2 மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டபோது மாணவர்கள் 11ஆம் வகுப்பில் இருந்தே நீட் தேர்வுக்காக கவனம் செலுத்தி அதுதொடர்பாக படித்து வருவதாகவும், எனவே, அந்த மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதன் காரணமாக, தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யும் போது அவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வந்திருப்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஆனால், 11ஆம் வகுப்பு பாடங்களை பைபாஸ் செய்துவிட்டு, நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் அதில் கவனம் செலுத்தியதற்கு சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிகளே காரணம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்குச் செல்லாவிட்டால், குறைவான மதிப்பெண்கள் காரணமாக வேறு படிப்புகளுக்கு செல்வதிலும் பிரச்சனை எழும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வு வெற்றிக்காக, 11ஆம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்பட்டதன் விளைவு, எதிர்பாராத கொரோனா பரவலால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பிரச்சனையாக வெடித்திருப்பதாக கூறுகின்றனர் கல்வியாளர்கள். நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மாணவர்களை பதினொன்றாம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க வைப்பதும் முக்கியம் என்பதை தனியார் பள்ளிகள் உணரவேண்டும் என்பதே, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments