ஐபிஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகளிடம் பிரதமர் பேச்சு..!
காவல்துறையினர் குறித்து மக்களிடம் உள்ள எதிர்மறைக் கருத்துக்களைப் போக்க வேண்டும் என ஐபிஎஸ் பயிற்சி முடித்த காவல் அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐதராபாத் தேசியக் காவல் அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளிடம் காணொலியில் உரையாடிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் காவல்துறையினர் உயிர்த்தியாகம் செய்த போதிலும் அவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்காதது ஏன்? என வினவினார்.
காவல் அதிகாரிகளின் கொள்கைகளும் நோக்கங்களும் அவர்களின் நடத்தையில் தெரிய வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், நாட்டு நலனுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும், மக்களின் நண்பனாக இருக்க வேண்டும் தெரிவித்தார். காவல் அதிகாரிகள் உடலைக் கட்டுறுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இது இளைஞர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்றும் தெரிவித்தார்.
வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், சமுதாயத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சத்தீஸ்கருக்குச் செல்லும் அதிகாரியைக் கேட்டுக்கொண்டார். பயிற்சியில் முதலிடம் பெற்ற பெண் அதிகாரியிடம் பேசிய மோடி, உள்ளூர்ப் பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று மாணவியரிடம் உரையாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தில் நாட்டு விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்ய இந்தியர்கள் தயாராக இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இப்போது அதற்கும் ஒருபடி மேலேபோய் நாட்டுக்காகவே அதிகாரிகள் வாழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Comments