இந்திய - சீன உயர் அதிகாரிகள் 12ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை ; படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தல்

0 3182
இந்திய - சீன உயர் அதிகாரிகள் 12ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா இடையே ராணுவ உயர் அதிகாரிகள் நிலையிலான 12ஆவது சுற்றுப் பேச்சு மால்டோவில் இன்று நடைபெற்றது. உராய்வுப் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்பிருந்த நிலைகளைத் தாண்டிச் சீனப் படையினர் வந்ததால் இந்தியப் படையினர் தடுத்து நிறுத்தினர். இரு நாட்டுப் படையினரின் கைகலப்பில் இந்தியா சார்பில் 20 பேரும், சீனா சார்பில் பலரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து எல்லையில் பதற்றத்தைத் தணிக்கவும் முன்பிருந்த நிலையைப் பராமரிக்கவும் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். அதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்கள் ஏற்கெனவே 11 முறை நடைபெற்றன.

மூன்று மாத இடைவெளிக்குப் பின் 12ஆவது சுற்றுப் பேச்சு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் சீனப் பக்கத்தில் உள்ள மால்டோ என்னுமிடத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் பிஜிகே மேனன், வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் நவீன் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அதிகாரிகளும், சீனா சார்பில் மேற்குப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி சு கிலிங் தலைமையிலான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா குன்றுகள் ஆகியவற்றின் உராய்வுப் பகுதிகளில் இருந்தும், தேப்சாங் சமவெளியின் தொள்ளாயிரம் சதுரக் கிலோமீட்டர் பரப்பில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் எனச் சீனாவிடம் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments