லீ மெரிடியன் ஹோட்டல்களை எம்ஜிஎம் கையகப்படுத்த இடைக்கால தடை - தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

0 4885
லீ மெரிடியன் ஹோட்டல்களை எம்ஜிஎம் கையகப்படுத்த இடைக்கால தடை

சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களை, எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துகள், 423 கோடி ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிஜிபி குழுமத்தின் அதிபரான பழனி பெரியசாமி, நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியை சேர்ந்தவர். 1984-ல் எம்ஜிஆரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் ஏற்பாடு செய்தவர் பெரியசாமிதான். சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை, தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் பிரைவேட் நிறுவனம் நடத்தி வந்தது.

விரிவாக்கத் திட்டங்களினால், சுமார் 389 கோடி ரூபாய் எனக் கூறப்படும் அளவுக்கு கடன்கள் ஏற்பட்டு, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, திவால் சட்டத்தின் கீழ், இந்திய சுற்றுலா வளர்ச்சி நிதிக் கழகம் சட்ட நடவடிக்கையை தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாத்தில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய உத்தரவுகளின்படி, லீ மெரிடியன் ஹோட்டல்களை மதிப்பீடு செய்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எம்.கே.ராஜகோபாலன் தலைமையிலான எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட்டெட் 423 கோடி ரூபாய்க்கு, அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அதை ஏற்றது. 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அடிமாட்டு விலைக்கு விற்பதாக, பழனி பெரியசாமி சட்ட விதிகளின்படி எழுப்பிய ஆட்சேபத்தை நிராகரித்த தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் கடந்த 15ஆம் தேதி இறுதி உத்தரவை பிறப்பித்தது.

இதை எதிர்த்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பழனி பெரியசாமி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டில், தீர்ப்பாயம் மேற்கொண்ட கடன் தீர்வு செயல்முறை, பல்வேறு சட்டமீறல்களால் சீர்குலைந்துவிட்டதாகவும், ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளை, 423 கோடி ரூபாய் என்ற தொகைக்கு விற்கும் நிலைக்கு தள்ளிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், லீ மெரிடியன் ஹோட்டல்களை 423 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் நிறுவனம் கையகப்படுத்த அனுமதி வழங்கிய தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்திவைத்துள்ளது. 3 நாட்களில் 450 கோடி ரூபாய் நிதி பெற்று டெபாசிட் ஆக செலுத்த தயார் என்றும், நிறுவனத்திற்காக வழங்கப்பட்ட அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த தயார் என மனுதாரர் முன்வந்திருப்பதாகவும், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லீ மெரிடியன் ஹோட்டலை வாங்கி, மருத்துவமனையாக மாற்றும் எம்.கே.ராஜகோபாலனின் திட்டம் ஏராளமான ஊழியர்கள் உள்ளிட்டோரின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர் முறையிட்டுள்ளதையும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல்முறையீட்டின் மீது எம்.கே.ராஜகோபாலன் 2 வாரங்களில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அடுத்த விசாரணை வரும் 25ஆம் தேதி பட்டியலிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments