வாட்ஸ் அப் மகிமை அம்மன் சிலைக்கே விபூதி அடித்த பூசாரி..! கண் திறந்ததாக கூறி வசூல்
கரூர் அருகே அம்மன் சிலை கண் திறந்து பார்ப்பதாக பரவிய தகவலால், கூட்டம் கூட்டமாக அந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அம்மனை புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அம்மன் சிலைக்கு விபூதி அடித்த பூசாரியின் வாட்ஸ் அப் சேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கரூரை அடுத்த வாங்கப்பாளையம் காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள எல்லை வாங்கலம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது..!
50 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த கோவிலில் பலதரப்பட்ட மக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாதம் 2ம் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் கோவில் பரம்பரை பூசாரியான சரவணனின் மகன் சக்திவேல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டியுள்ளார். பின்பு, தான் வைத்திருந்த செல்போனில் அம்மனை போட்டோ எடுத்ததாகவும், அந்த போட்டோவை பார்த்த போது அம்மனின் கண்ணில் திருநீர் பூத்து கண் திறந்தது போல் இருந்ததாக கூறி அந்தப்படத்தை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டுள்ளார்.
இதனை அருகில் உள்ள கோவிலில் இருந்த தனது தந்தையிடம் கொண்டு போய் காண்பித்து மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், வாட்ஸ் அப்பில் அம்மன் சிலை கண் திறந்து விட்டது என்ற இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனையடுத்து இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் அந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து, கருவறைக்கு வெளியே நின்றபடியே அம்மன் சிலையை அதிசயமாக பார்த்து பரவசமடைந்தனர். சிலர் முண்டியடித்துக் கொண்டு தாங்கள் வைத்திருக்கும் செல்போன் மூலம் போட்டோ எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அம்மனை வழிபடுவதில் தீவிரம் காட்டியதால் கொரோனா விதிமுறையை பின்பற்ற இயலாத தர்ம சங்கடம் உருவானது.
நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த போலீசார் சீனியர் பூசாரி சரவணனை அங்கு வரவழைத்தனர். அவர் அம்மன் சிலை அருகே சென்று உற்று நோக்கியதில் அம்மனின் கண்ணில் தண்ணீரில் குழைத்த விபூதி பூசப்பட்டிருப்பதை கண்டார். அவர் அந்த விபூதியை துடைத்து விட்டதால் கூட்டமும் கலைய தொடங்கியது. காலையில் பூஜை செய்த இளம் பூசாரி சக்திவேல் அம்மன் கண்களில் தண்ணீரில் விபூதியை கலந்து பூசி அதனை போட்டோ எடுத்து கண் திறந்ததாக வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது தெரியவந்தது.
அதன் பின்னரும், பொதுமக்கள் அம்மனை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் இருந்தனர். அம்மன் கண் திறந்து விட்டதாக பரவிய தகவலால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் திரண்டதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
Comments