கொஞ்சி கொஞ்சி பேசி பஞ்சராக்கிய வஞ்சிக் கொடிக்கு காப்பு..! பார்த்திபன் கனவு கலைந்தது

0 6314
கொஞ்சி கொஞ்சி பேசி பஞ்சராக்கிய வஞ்சிக் கொடிக்கு காப்பு..! பார்த்திபன கனவு கலைந்தது

திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி செல்போனில் இரு பெண்களை போல ஆபாசமாக பேசி பணம் பறித்து வந்த பெண், அவரது கணவனுடன் கைது செய்யப்பட்டார். கொஞ்சி கொஞ்சி பேசிய வஞ்சிக் கொடியால் ரியல் எஸ்டேட் அதிபரின் பாக்கெட் பஞ்சரான பின்னணி குறிந்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கண்டியூரைச் சேர்ந்தவர் 51 வயதான சரவணபார்த்திபன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது மனைவி 25 வயதான ஜனனி என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதல் நாள் நண்பர்களாக பழகிய இருவரும் மறு நாளே இட்லி உப்புமா மாதிரி திடீர் காதலர்களாக மாறியுள்ளனர். ஜனனியின் முக நூல் புரொபைல் அழகில் சொக்கிய சரவணன், ஜனனி முகநூல் கணக்கு உண்மையிலேயே பெண் தானா அல்லது பேக் ஐடியா என்று கண்டறிய செல்போன் நம்பரை பெற்று பேச தொடங்கி உள்ளார். ஜனனியின் பேச்சில் உருகிய சரவணன் , அவரது அந்தரங்க பேச்சுக்களை ரசித்துள்ளார். இதற்காககவே ஜனனியுடன் கால நேரம் பார்க்காமல் செல்போனில் பேசிவந்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜனனி காம பேச்சுக்களால் சரவணனை தலையாட்டி பொம்மையாக்கி கூகுள் பே மற்றும் போன் பே மூலம் லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் ஆத்திரப்பட்டு ஆவேசமான கணவர் பார்த்திபனிடம், ஊரடங்கு காலத்திலும் உழைக்காமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வித்தையை மனைவி விவரித்ததும் வியந்து போய் சம்மதித்துள்ளான் பார்த்திபன்..!

ஒரு கட்டத்தில் ஜனனியுடன் பேசுவது போரடித்ததால் சரவணன் கழன்று கொண்ட நிலையில், கணவர் வாங்கிக் கொடுத்த மற்றொரு செல்போன் நம்பர் மூலம் சரவணனை தொடர்பு கொண்டு ஜனனியின் தோழி பேசுவதாக குரலை மாற்றி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவரது சபலத்தை தூண்டும் விதமாக ஆபாசமாக பேசி மற்றொரு கணக்கு வழியாக பணம் பறித்துள்ளார்.

இந்நிலையில் கடந்தவாரம் சரவண பார்த்திபனை தொடர்பு கொண்ட ஜனனி, நீங்கள் என் தோழியுடன் பேசுவது அவளது வீட்டிற்கு தெரிந்துவிட்டதால் தோழி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறாள், எனவே அவளுக்கு மொத்தமாக பணம் கொடுத்து செட்டில் செய்துவிடுங்கள் என ஐடியா கொடுப்பது போல கூறியுள்ளார். ஆனால் அதற்கு பிடி கொடுக்காத சரவணன் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிரிமினல் ஜனனி குரலை மாற்றி சரவணனிடம் பெண் போலீஸ் போல் பேசி பணம் தராவிட்டால் செட்டில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து மிரண்டு போன சரவணன், பணம் தருவதாக சரணாகதி அடைந்துள்ளார். எங்கள் இன்ஸ்பெக்டரை அனுப்பிவைக்கிறேன் அவரிடம் பணம் கொடுத்து அனுப்புங்கள் என்று போலீஸ் போல பேசிய ஜனனி, கணவர் பார்த்திபனை இன்ஸ்பெக்டர் போல் திருவாரூர் மாவட்டம் கண்டியூர்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

சபல பேச்சால் சங்கடத்தில் சிக்கிய சரவணனிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பார்த்திபன் இந்தப் பணம் போதாது மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். நாடகத்தில் போலீஸ் வேசம் போட்டால் கூட நம்ப இயலாத அளவிற்கு சாதாரணமாக இருந்த பார்த்தீபன் மீது சந்தேகம் ஏற்பட்டதால், பார்த்திபனை கும்பகோணத்தில் உள்ள தனக்கு தெரிந்த தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்துவிட்டு தனது நண்பர்களை அழைத்துச் சென்று பார்த்திபனை விசாரித்த போது, கிரிமினல் ஜனனியின் ஐடியாபடி பணம் பறிக்கும் நோக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

இதையடுத்து பார்த்திபனை பணய கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, தூத்துக்குடியில் இருந்த ஜனனியை, பணத்துடன் கும்பகோணம் வரச்சொல்லியுள்ளனர். கேடியான ஜனனி தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் கணவரை கடத்தி வைத்திருப்பதாக சரவணன் மீது புகார் அளித்துவிட்டு, வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் வந்து அங்குள்ள மேற்கு போலீஸ் நிலையத்திலும் கடத்தல் புகார் தெரிவித்தார். லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பார்த்திபனை மீட்ட போலீசார் அவரை பிடித்து வைத்திருந்த சபலத்தில் சறுக்கிய சரவணன், மற்றும் இருகூட்டாளிகளையும் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்தது உறுதியானதால் பார்த்திபனையும் ஜனனியையும் போலீசார் கைது செய்தனர். சபலத்தில் சிக்கிய சரவண பார்த்திபன் - தானாக வந்து சிக்கிய சாதாரண பார்த்திபன் ஆகிய இருவரின் கனவுகளும் கலைந்து போனதால் திருச்சி சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments