கார் ஓட்டும் போது விபரீத குறட்டை நிறுத்த என்ன வழி ? மருத்துவர் சொல்லும் மருந்து
குறட்டை சத்தம் வாயில் இருந்து வருகின்றதா, மூக்கில் இருந்து வருகின்றதா என்று சிலர் அரட்டை அரங்கம் நடத்திக் கொண்டிருக்க, அன்றாடம் இரவில் தூங்கும் போது நம்மை அறியாமல் வரும் குறட்டையை அடக்க இயலாமல் தவிப்போருக்கு , குறட்டையை போக்க மருத்துவர் சொல்லும் பயனுள்ள ஆலோசனை .
குறட்டையை வைத்து சினிமாவில் அரட்டை அரங்கம் நடத்தி காமெடி செய்தவர்கள் கூட குறட்டைக்கு தீர்வு சொன்னது கிடையாது. உடல் பருமனால் நிகழும் அசாத்திய உருமல் சத்தமான குரட்டை படுக்கை அறையில் உடன் படுத்திருப்பவரின் தூக்கத்தை பதம்பார்த்து விடுகின்றது
படுக்கை அறையில் இருந்து எழும் இந்த புலி உறுமல் கீதம், பலரது தாம்பத்ய வாழ்க்கைக்கு மங்களம் பாடி இருக்கின்றது. கணவன் விடும் குறட்டையை காரணம் காட்டி பிரிந்து சென்ற மனைவியர்கள் மத்தியில் இதற்காக பஞ்சாயத்தை கூட்டாமல், காதில் பஞ்சைவைத்து காலத்தை தள்ளும் தர்மபத்தினிகள் அதிகமாகவே இருக்கின்றனர்.
இந்த குறட்டை நோய் வருவதற்கான அறிகுறிகளாக சிலவற்றை சொல்லலாம், காலையில் எழுந்து நாளிதழ் படிக்கும் போதும், வாகனம் ஓட்டும் போதும், வாகனம் சிக்னலில் நிற்கும் சில வினாடிகளுக்கெல்லாம் வரும் குட்டி தூக்கமே, குறட்டையாரை உடலுக்குள் அழைத்துவரும் விருந்தாளி என சுட்டிக்காட்டும் மருத்துவர்கள். குறட்டை என்பது கோளாறு மட்டுமல்ல, இரவு நேர தூக்கத்தின் போது, சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, சீராக மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமமே குறட்டை என்கின்றனர்
உடல் பருமனாகவும், குட்டையாகவும் இருப்பது , நாக்கு மற்றும் மேல் அண்ணம் தடிமனாக இருத்தல், மேல் மற்றும் கீழ் தாடையின் வளர்ச்சி, கழுத்தின் சுற்றளவு அதிகமாக இருத்தல் போன்ற காரணத்தால் சுவாசிக்கும் காற்று எளிதாக மூச்சுக்குழாய் உள்ளே போய் வெளியே வர முடியாத நிலை ஏற்படும் என்றும் இதனால் அதிக அழுத்தம் கொடுத்து சுவாசிக்கும் போது, காற்றின் வேகத்தால் பக்கத்து தசைகளில் ஏற்படுத்தும் அதிர்வே, குறட்டை சத்தமாக வெளிவருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்
நடைமுறை வாழ்க்கையில் இது என்னவென்றே அறியாமல் பலர் படுத்தோமா குறட்டை விட்டு பிறர் தூக்கத்தை கெடுத்தோமா என்று வாழ்ந்து வருவதாகவும், விழிப்புணர்வு அடைந்து மருத்துவமனையை நாடி வருவோருக்கு, 25 வகையான கேள்விகளை கொண்ட வினா தாள் கொடுக்கப்படுகின்றது. அதில் அதற்கான அறிகுறிகள் தொடர்பான வினாக்கள் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் அளிக்கும் பதில்கள் மூலம் சம்பந்தபட்டவரை குறட்டையாளர் என்று உறுதி செய்கின்றனர்.
சரி இதனை சரிசெய்வது எப்படி ? என்ன மருந்து சாப்பிடலாம் ? என்று கேட்டால், மருந்தும் உங்களிடம் தான் உள்ளது என்று சொல்லும் மருத்துவர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன், சளியை அதிகரிக்க செய்யும் சீஸ், பர்கர், பிட்சா போன்ற அதிக கொழுப்புள்ள உணவு பொருட்கள் உண்பதை தவிர்ப்பது, பொரித்த உணவு வகைகளை சாப்பிட்டு உடல் பருமனாவதை தவிர்ப்பது, தினமும் காலையில் நடைபயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டால், வரும் காலத்தில் இது போன்ற குறட்டை பிரச்னையில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என்று தீர்வு சொல்கின்றனர்.
நான்கு சுவற்றுக்குள்தானே கேட்க போகின்றது என்று குறட்டையை அலட்சியம் செய்யாமல், விழிப்புடன் உணவுகட்டுப்பாடுகளுடன்,உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், குறட்டை சத்தத்தில் இருந்து நம்மை மட்டுமல்ல, நம்முடன் படுத்து தூக்கத்தை இழந்தவர்களின் நிம்மதியையும் மீட்டு எடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை..!
Comments