சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை - சென்னை மாநகராட்சி

0 6541
9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9  இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொத்தவால் சாவடி மார்கெட் ஆகஸ்ட் 1 ஞாயிற்று கிழமை முதல் 9 ஆம் தேதி காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளின்படி பொதுஇடங்களில் முகக் கவசம் அணிவது, போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments