காவலர்களுக்கு வார விடுப்பு ; பிறந்தநாள், திருமணநாளுக்கும் லீவு.!

0 8710
தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு வார விடுப்பு - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் அவர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறையும் வழங்க வேண்டும் எனவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும் எனவும், காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தியினை, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுடன் நல்லுறவு பாதிக்கப்படுவதாகவும், எனவே காவலர்களுக்கு ஓய்வு வழங்கபட வேண்டும் என்பது காவலர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments