தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கை ஆகஸ்டு 9 வரை நீட்டித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் சூழலில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிரக் கூடுதலாக எந்தத் தளர்வுகளுமின்றி ஆகஸ்டு 9 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் முடிவு செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடைகளின் நுழைவு வாயிலில், சானிட்டைசர்கள் வைப்பதுடன், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், கடைகளில் பணிபுரிவோரும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments