ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்றுடன் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா கால அவசரத் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் 4 மாதங்களுக்கு அனுமதி வழங்கியது. ஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு கேட்டு ஆலைத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது தமிழ் நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் முழுமையாக தனது இயக்கத்தை நிறுத்த ஒரு நாள் ஆகும் என்பதால், இன்றே ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்புப் பணிக்காக 2 மெகாவாட் மின்சாரம் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Comments