நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி

0 5226

வருவாய் இழக்காதோரிடம் 85 விழுக்காடு கட்டணத்தையும், ஊரடங்கால் வருவாய் இழந்தவர்களிடம் 75 விழுக்காடு கட்டணத்தையும் 6 தவணைகளாகப் பெறத் தனியார் பள்ளிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா சூழலில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் பெறுவது தொடர்பான வழக்கில் நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில் வருவாய் இழப்பு இல்லாத, அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோரிடம் 85 விழுக்காடு கட்டணத்தையும், வருவாய் இழந்தவர்களிடம் 75 விழுக்காடு கட்டணத்தையும் ஆறு தவணைகளாகப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டணச் சலுகை கோரினால் தனியார் பள்ளிகள் பரிசீலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளியில் இருந்து  நீக்கவோ, இணையவழி வகுப்பில் பங்கேற்கத் தடை விதிக்கவோ கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கட்டணச் சலுகையில் பிரச்சனை எழுந்தால் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் மனு அளிக்கலாம் என்றும், அந்த மனுவை 30 நாளில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதைப் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். 

சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை இணையத்தளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை எட்டு வாரங்களில் நிரப்பவும், கட்டணம் தொடர்பாகத் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments