"எங்களுக்கு வேண்டாம்" - உதறிய பெற்றோர் காப்பகம் சென்ற கைக்குழந்தை
விருதுநகர் அரசு மருத்துவமனையில் “அண்ணப்பிளவு” எனப்படும் குறைபாட்டுடன் பிறந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தை தங்களுடையது இல்லை என அடம் பிடித்த பெற்றோர், டி.என்.ஏ சோதனையில் குழந்தை அவர்களுடையதுதான் என நிரூபித்த பின்பும் ஏற்க மறுத்து விட்டுச் சென்றதால், குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே குன்னத்தூரைச் சேர்ந்தவர்கள் சங்கிலி - சுப்புலட்சுமி தம்பதி. கர்ப்பிணியாக இருந்த சுப்புலட்சுமி, பிரசவத்துக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த ஜூலை 8ஆம் தேதி காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என உறவினர்களிடம் தெரிவித்த செவிலியர்கள், சிறிது நேரத்தில் வந்து, நாங்கள் தவறுதலாக சொல்லிவிட்டோம் அது ஆண் குழந்தை அல்ல, பெண் குழந்தை என்றும் அதுவும் அண்ணப்பிளவு குறைப்பாட்டுடன், கை, கால் விரல்கள் ஒட்டிய நிலையில் பிறந்திருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சங்கிலி, தனது மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தையை மாற்றி யாரிடமோ கொடுத்துவிட்டு, யாருக்கோ பிறந்த மாற்றுத் திறனாளி குழந்தையை தங்களுடையது எனக் கூறுகின்றனர் என குற்றம்சாட்டினார். மருத்துவமனை நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்திலும் அவர் புகாரளித்ததால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மரபணு சோதனையில் அந்தப் பெண் குழந்தை சங்கிலி - சுப்புலட்சுமி தம்பதிக்குப் பிறந்ததுதான் என உறுதியாகியுள்ளது. ஆனாலும் குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என தம்பதியர் அடம் பிடித்துள்ளனர். மருத்துவர்களும் போலீசாரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் குழந்தை எங்களுக்கு வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மருத்துவமனையிலேயே அவர்கள் விட்டுச் சென்றதால் வேறு வழியின்றி தத்தெடுப்பு மையத்தில் அந்தப் பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
பிறக்கும்போதே குழந்தைக்கு உதடு மற்றும் அண்ணம் ஆகிய இரண்டும் பிளவுபட்ட நிலையில் காணப்படுவது அண்ணப்பிளவு எனப்படுகிறது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது, கருக்காலத்தில் ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாதது என அண்ணப்பிளவு பிரச்சனைக்கு ஏராளமான காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஃபாலிக் அமில குறைபாடும் அண்ணப்பிளவு பிரச்சனைக்குக் காரணமாக இருக்கும் என்று கூறும் மருத்துவர்கள், கருத்தரிக்க திட்டமிடும்போதே பெண்ணுக்கு ஃபோலிக் அமில குறைபாடு இல்லாமலும் இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும் பார்த்து கொள்வது அவசியம் என்கின்றனர். அதே நேரம் அண்ணப்பிளவு பிரச்சனையை சரி செய்ய நவீன மருத்துவ யுகத்தில் ஏராளமான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும் சிகிச்சை முடிந்து குழந்தைக்கு பேச்சுப் பயிற்சி கொடுத்து, மற்ற குழந்தைகளைப் போலவே இயல்பாக அவர்களையும் வளர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments