ஃபிரான்சில் 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததாக அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதி
ஃபிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததை, அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவுபார்க்கப்பட்டதாக உலகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அத்தகையதொரு குற்றச்சாட்டை முதன் முதலில் ஒரு அரசு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற தொழில்நுட்ப நிறுவனம் பெகாசஸ் என்ற உளவுமென்பொருளை தயாரித்து, அரசுகளுக்கும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறது. இந்த ஸ்பைவேரை பயன்படுத்தி செல்போன்களை ஹேக் செய்து, அதிலிருந்து பல்வேறு விவரங்களை திரட்ட முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதிர்க்கட்சியினர், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், சமூகசெயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் உளவு பார்க்கப்பட்டதாக இந்தியா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என ஏற்கெனவே மத்திய அரசு மறுத்துவிட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீது, அடுத்த வாரத்தில் விசாரணை நடைபெறலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
இதனிடையே, ஃபிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்டோர் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டின் சைபர் பாதுகாப்பு அமைப்பு, மீடியாபார்ட் என்ற ஆன்லைன் புலனாய்வு இதழைச் சேர்ந்த 2 செய்தியாளர்களின் செல்போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வகையில், பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டை முதன் முதலில் ஒரு அரசு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளில் பெகாசஸ் ஸ்பைவேர் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் அரசு, அந்த மென்பொருளை தயாரிக்கும் என்எஸ்ஓ அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இஸ்ரேல் அரசின் விசாரணைக்கு வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ள என்எஸ்ஓ நிறுவனம், இதன் மூலம் தங்கள் மீது ஊடகங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபணமாகும் எனக் கூறியுள்ளது.
Comments