முட்டை மூலம் மொட்டை போட முயற்சி.. ஆன்லைன் நிறுவனத்திற்கு ஆரம்பத்திலேயே ஆப்பு..!
700 ரூபாய் கொடுத்தால் வாரம் 6 முட்டை வீதம் ஒரு வருடத்திற்கு வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரத்தை வெளியிட்டு மக்களிடம் பணம் பறிக்க முயன்ற “டுபாக்கூர்” நிறுவனத்திற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் போலீசார். சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மக்களின் ஆசையைத் தூண்டி மோசடி செய்ய முயன்ற உரிமையாளர் ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என நிறுவனத்தை மூடிவிட்டு ஒதுங்கியுள்ளார்.
கடந்த 18ஆம் தேதி “ரஃபோல் ரீடெய்ல்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிட்டெட் எக்மார்ட்” (Rafoll Retails (OPC) Pvt. Ltd. Eggmart) என்ற பெயரிலான நிறுவனம் ஒன்று 3 கவர்ச்சிகரமான திட்டங்களுடன் ஆன்லைன் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரத்தை வெளியிட்டது.
அதில் ஒரு முட்டையின் விலை, 2 ரூபாய், 24 பைசா மட்டுமே என்றும் தங்கள் நிறுவனத்தில், 700 ரூபாய் முதலீடு செய்தால், வாரம் தோறும் 6 முட்டைகள், ஆயிரத்து 400 ரூபாய் முதலீடு செய்தால், வாரம் 12 முட்டைகள், 2 ஆயிரத்து 800 ரூபாய் முதலீடு செய்தால், வாரம் தோறும் 24 முட்டைகள் என ஓராண்டு வரை கொடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓராண்டுக்கான முட்டைகளை உங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து தருவோம் என்றும் இச்சலுகை முதலில் பதிவு செய்யும் 5 லட்சம் பேருக்கு மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விளம்பரத்தின் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து விளம்பரம் குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க நிறுவனத்தின் உரிமையாளர் சிவம் நரேந்திரன் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி கடந்த 20ஆம் தேதி கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அவரை அதிகாரிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
தீவிர விசாரணையில் அது ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்பது தெரியவந்தது. பொது மக்களிடம் இருந்து முன் பணம் பெறுவதற்கான ஆவணங்கள், அந்நிறுவனத்தை நடத்துவதற்குரிய முறையான உரிமம், என எதையுமே சிவம் நரேந்திரன் வைத்திருக்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து, வேறு வழியின்றி 'எங்கள் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தவில்லை என்றும் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் வாயிலாக பணம் கட்டியவர்களுக்கு, அதே முறையில் திருப்பி அனுப்பி விடுகிறோம் என்றும் எங்கள் நிறுவனத்தின் பெயரில் இயங்கும் இணையதளத்தையும் முடக்கி விடுகிறோம்' என்றும் அவர் கதறியுள்ளார். அதன்படி பணத்தையும் திருப்பிச் செலுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.
140 கோடி மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்திய தேசம் என்பது உலகின் மிகப்பெரிய சந்தையாகப் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினரை ஏமாற்றினாலும் போதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் ஏராளமான மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன. அவர்கள் கொடுக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் நம்பி பணத்தை முதலீடு செய்தால் நம் வாழ்நாள் சேமிப்பையே இழக்க நேரிடும் என எச்சரிக்கும் போலீசார், நடைமுறைக்கு சாத்தியமில்லாத சலுகைகளோடு வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Comments