அடைபட்ட அம்மனை மீட்க சிவலிங்கத்தை உடைத்து அறங்காவலர் விபரீத சேட்டை..!
திண்டிவனம் அடுத்த மரக்காணம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான மலைக்கோயில் சிவலிங்கத்தை அந்த கோவிலின் அறங்காவலரே கடப்பாறையால் உடைத்து போட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவலிங்கத்துக்குள் அம்மன் அடைப்பட்டு கிடப்பதாக வந்த கனவை நம்பி, அம்மனை மீட்பதற்காக லிங்கத்தை உடைத்ததாக கதை அளந்த அறங்காவலர் ஜெயிலில் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் அருகே உள்ள பெருமுக்கல் சஞ்சீவி மலையில் சோழர்கால கல்வெட்டுகள் நிறைந்த முக்யாசலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தமலை அடிவாரத்தில் சிவனுடன் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.
இந்த இரு சிவாலயங்களுமே 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று கூறப்படுகின்றது. கடந்த 27 ந்தேதி நள்ளிரவு பெருமுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்து குழி தோண்டி இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலை பராமரித்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த அரங்காவலர் ராமு அளித்த புகாரின் பேரில் பிரம்ம தேசம் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
கோவிலின் சாவி அறங்காவலரான ராமுவிடம் இருக்கும் நிலையில் பூட்டை உடைக்காமல், பூட்டை திறந்து கோவிலுக்குள் புகுந்து சிவலிங்கத்தை உடைத்து குழி தோண்டியது எப்படி ? என்று சந்தேகப்பார்வையை ராமு பக்கம் திருப்பினர் காவல்துறையினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த ராமு, ஒரு கட்டத்தில் சிவலிங்கத்தை உடைத்ததை ஒப்புக் கொண்டான்.
எதற்காக என்று விசாரித்த போது காமாட்சி அம்மன் கனவில் வந்து தன்னை சிவலிங்கத்துக்குள் அடைத்து வைத்திருப்பதாக கூறியதால், அம்மனை மீட்பதற்காக சிவலிங்கத்தை உடைத்து கீழே குழி தோண்டி பார்த்ததாகவும் அங்கு அம்மனை காணவில்லை என்று கூறி போலீசாரை திகைக்க வைத்துள்ளான்.
கோவிலில் அறங்காவலராக இருப்பதால் கோவிலின் சாவிகள் அனைத்தும் ராமுவிடம் இருந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணி அளவில் கோவிலின் கதவையும் பூட்டையும் சாவி கொண்டு திறந்து உள்ளே நுழைந்தவன், சிவலிங்கத்தை உடைத்து அதற்கு அடியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மன்னர் காலத்து சுத்தமான தங்க, வைர நகைகள் இருக்கும் என்ற ஆசையில், குழியை தோண்டி பார்த்து விட்டு, எதிர்பார்த்தது கிடைக்காததால் அம்மனை மீட்க குழி தோண்டியதாக கதை அளந்து வழக்கில் சிக்கிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சிவலிங்கம் உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ராமுவை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments