டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லீனா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை லாவ்லீனா, குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி வென்ற நிலையில், இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தையும் வீராங்கனையே உறுதிசெய்துள்ளார்.
வெல்ட்டர்வெயிட் எனப்படும் 64 முதல் 69 கிலோ வரையிலான எடைப் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லாவ்லீனாவும், சீன தைபே வீராங்கனை சென்-நியன்-சின்னும் களம் கண்டனர். ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய லாவ்லீனா, மிகச்சிறந்த நுட்பங்களை கையாண்டு, இறுதிச் சுற்றுவரை ஆதிக்கம் செலுத்தி 4க்கு1 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார்.
வெல்ட்டர்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் அவருக்கு உறுதியாகியுள்ளது. அதேசமயம் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள் உள்ளதால் தங்கப்பதக்கம் அல்லது வெள்ளி வெல்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. அசாமை சேர்ந்த 23 வயது வீராங்கனையான லாவ்லீனா, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறையும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறையும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியா அருமையான செய்தியுடன் விழித்தெழுந்திருப்பதாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தங்கப் பதக்கம் மட்டுமே தனது இலக்கு என லாவ்லீனா கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் பாணியை தான் பின்பற்றுவதாகவும், மேரி கோம் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் லாவ்லீனா தெரிவித்துள்ளார்.
பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Comments