உயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்
அலட்சியம், தாறுமாறான வேகம், டிரங்க் அண்ட் டிரைவிங் என உயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் விதிமீறல்களின் வரிசையில், கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல் நெடுஞ்சாலை பயணங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அத்தகைய பொறுப்பற்ற நடத்தையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியதன் அவசர அவசியத்தை, நடுரோட்டில் 2 லாரிகள் தீப்பற்றி எரிந்த பகீர் விபத்து உணர்த்தியுள்ளது. அதுகுறித்த செய்தித் தொகுப்பு...
கோழி தீவனம் இறக்கிவிட்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காலி லாரி ஒன்று, தமிழ்நாடு ஓட்டல் அருகே தண்டகுப்பம் என்னும் இடத்தில் சிலரை இறக்கிவிடுவதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது சென்னையில் இருந்து சிமெண்ட்லோடு ஏற்றிவந்த கண்டெய்னர் டிரக், சாலையோரம் நின்றிருந்த லாரிமீது மோதியுள்ளது. இரு லாரிகளிலும் தீப்பிடிக்கும் அளவுக்கு ஏற்பட்ட இந்த மோதலில், ஒரு லாரி சிறிது தூரம் நகர்ந்து சென்று தடுப்புக் கம்பிகளில் உரசி நின்றது.
லாரிகளில் கொளுந்து விட்டு எரிந்த தீயால் அங்கு மயான அச்சம் நிலவியது. பர்கூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தில் லாரி கிளீனர் ஒருவருக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்துவதற்கு என ஆங்காங்கே "டிரக் பே" (Truck Bay) என வசதியான பகுதி ஒதுக்கப்பட்டு, அவற்றை குறிக்கும் சைன் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. அப்படி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல், பொறுப்பற்ற முறையில் சாலையோரம் லாரியை நிறுத்தியதே கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம்.
ஆட்களை இறக்கிவிடுவதற்காகவே இருந்தாலும் லாரியை சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தியதே விபத்திற்கு முக்கிய காரணம். அத்துடன் பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்க எமர்ஜென்சி இண்டிகேட்டர்களும் ஒளிரவிடப்படவில்லை. அப்படி செய்திருந்தால் கூட இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும்.
உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், சாலையோரங்களில் விதிகளை மீறி, பொறுப்பற்ற முறையில் நிறுத்தப்படும் லாரிகளால் அபாயகரமான விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன என்பதற்கு இந்த விபத்து மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி.
மேற்கத்திய நாடுகளில் நெடுஞ்சாலைகளின் ஓரம் வாகனங்களை நிறுத்துவதை பார்ப்பது மிக மிக அரிது. இதற்கு காரணம் அந்த நாடுகளில் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தினால் அதிக அளவு அபராதம் உள்ளிட்ட மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இதே போன்று இங்கும் தண்டனைகள் வழங்குவதுடன் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.
Comments