அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.! தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்

0 5217
அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.! தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை உள்ளன. இவற்றில், கேரளாவில் மீண்டும் வகைதொகையின்றி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் அளவிற்கு, கேரளாவில் கொரோனா பாதிப்பு சூழல் மோசமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், நோய் தடுப்பு பணிகளில், கேரள அரசோடு, மத்திய அரசும் கைகோர்த்துள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

இவ்வாறு, அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில் பெருந்தொற்று தடுப்பு பணிகள் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சாலைகளின் சோதனைச் சாவடிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலையார் சோதனைச் சாவடி, தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு குமுளி சோதனைச் சாவடி, கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஆர்டி-பிசிஆர் பெருந்தொற்று சோதனைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY