நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து.. ஆண் நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

0 13386

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கியது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், அதிவேகப் பயணம் தான் விபத்திற்கு காரணம் என்பது முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அத்தோடு, யாஷிகாவுடன் காரில் பயணித்த ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தியுள்ள போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவனி, ஆண் நண்பர்கள் இருவருடன் கடந்த 24-ந் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த போது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் தோழி வள்ளி ஷெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் காயத்துடன் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கார் விபத்து விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. முதலில் யாஷிகா புதுச்சேரிக்கு செல்லவில்லை என்பதும், மாமல்லபுரத்திலுள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு வரும் போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ள போலீசார், 2 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் நடந்த விபத்தின் சிசிடிவியை யாஷிகா விபத்தில் சிக்கிய சிசிடிவி என சிலர் தவறாக பரப்பி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி, காரின் சன் ரூஃப்பை திறந்து வைத்துக் கொண்டே பயணித்ததாகவும், அப்போது அவருடைய ஆடை, காரை ஓட்டிக் கொண்டிருந்த யாஷிகாவின் முகத்தில் விழுந்ததால் வழி தெரியாமல் விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்துக்கு காரணம் வள்ளி ஷெட்டி பவனி தான் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை முற்றாக மறுத்துள்ள போலீசார், அதிவேகப் பயணம் தான் விபத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து யாஷிகாவின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே, நடிகை யாஷிகா மீது அதிவேகப் பயணம், அலட்சியத்தாலும், ஆபத்தான செயலின் மூலமும் மற்றவர் உயிருக்கு தீங்கு விளைவித்தல், விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments