ஜார்கண்ட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற நீதிபதி மீது ஆட்டோவை மோத வைத்து கொலை..! உள்ளூர் தாதாவிற்கு ஜாமீன் வழங்க மறுத்த காரணத்தினால் வெறிச் செயல் என தகவல்

0 6831

ஜார்கண்டில் காலை நடைப்பயிற்சி சென்ற போது ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை தனது குடியிருப்பிற்கு அருகே காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

முதலில் நீதிபதி உத்தம் ஆனந்த் விபத்தில் பலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தின் பார் கவுன்சில் தலைவர் விகாஷ் சிங் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், நீதிபதி உத்தம் சிங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பார் கவுன்சில் தலைவர் விகாஷ் சிங் முறையிட்டார். உள்ளூர் தாதா ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த காரணத்தினால் தான் நீதிபதி உத்தம் சிங் கொலை செய்யப்பட்டதாகவும் விகாஷ் சிங் தன் முறையீட்டில் கூறியிருந்தார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஜாமீன் கொடுக்கவில்லை என்பதற்காக நீதிபதி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை என்றார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், அது பற்றி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதி கொலையின் பின்னணி குறித்து விசாரிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே நீதிபதியின் மீது ஆட்டோவை ஏற்றி கொலை செய்ததாக இரண்டு பேரை ஜார்கண்ட் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம், பின்னணி குறித்து விசாரிக்க தன்பாத் மாவட்ட எஸ்பி தலைமையில் சிறப்பு புலானாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments