பாக்ஸிங் ஜித்து கித்தேரி முத்து பேரன்கள் ஆவேசம்..! சார்பட்டா பரம்பரை நாங்க தான்..!
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தங்கள் தாத்தா கித்தேரி முத்துவுக்கு பெரியாரால் கொடுக்கப்பட்ட திராவிட வீரன் பட்டத்தை, சார்பட்டா பரம்பரை படத்தில் வரலாற்றை திரித்து வியாசர்பாடி ரெங்கன் கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தி இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு, கித்தேரி முத்துவின் பேரன்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் ரஞ்சித் தனது சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் சென்னையின் முன்னாள் பாக்சிங் வீரர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் சர்ச்சைகளை விதைத்துள்ளன. வாத்தியார் என்று சென்னை மக்களால் அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் குத்துச்சண்டைக்கு செய்ததை ரஞ்சித் திட்டமிட்டு மறைத்து விட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போர்க்கொடி உயர்த்தி உள்ள அதே நேரத்தில், சார்பட்டா பரம்பரையின் முதல் சாம்பியனும் தந்தை பெரியாரிடம் திராவிட வீரன் பட்டம் பெற்ற பாக்சிங் ஜித்து கித்தேரி முத்துவின் பேரன்களும், இயக்குனர் ரஞ்சித்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாக்சிங்கில் திராவிட வீரன் என்ற பட்டம் பெற்ற ஒரே குத்துச்சண்டை வீரர் தங்களது தாத்தா கித்தேரி முத்து என்றும், ராயபுரம் பனைமரத்தொட்டியை சேர்ந்தவர் என்றும் கூறிய அவர்கள், படத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரங்கன் என்ற கதாபாத்திரத்துக்கு திராவிடவீரன் என்று பட்டம் சூட்டி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பலர் பணத்திற்காக குத்துச்சண்டையை வியாபாரமாக்கி பயிற்சி அளித்து வரும் நிலையில் தங்கள் தாத்தா கித்தேரி முத்து காலத்தில் இருந்து 85 ஆண்டுகளாக பணம் வாங்காமல் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தனர். தாத்தாவோட காலத்துல சாதிமத பேதமில்லாமல் அனைத்து பிரிவு வீரர்களும் இணைந்த குத்துசண்டை பரம்பரைதான் சார்பட்டா பரம்பரை என்று பெருமிதம் தெரிவித்தனர்.
இத்தனை வருடத்திற்கு பிறகு பழைய நினைவுகளை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதால் படம் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வரலாற்றை திருத்தி மறைத்து கூறி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக அசல் சார்பட்டா பரம்பரையினர் தெரிவித்தனர்..!
Comments