கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பசவராஜ் பொம்மை..! பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு

0 3387

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார். எடியூரப்பா இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து பதவி விலகியதையடுத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பசவய்யா பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த எடியூரப்பா பாஜக மேலிட உத்தரவின்படி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று பெங்களூரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக கர்நாடக பாஜக மேலிடப் பார்வையாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்த பசவராஜ் பொம்மை ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் 23 வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் மூன்று துணை முதலமைச்சர்களும் சில புதிய அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவரான 61 வயதான பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருப்பதால் அரசியலில் பெரிய அளவில் குழப்பம் எழ வாய்ப்பில்லை என்று பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

பசவராஜின் தந்தையான எஸ்.ஆர்.பொம்மையும் கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான்.மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஏழை மக்கள் வாழ்வு உயர பாடுபட உறுதி எடுப்பதாக செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments