சிறுகச் சிறுக நகைகளை திருடி, தனி நகைக்கடை தொடங்கிய வடமாநில இளைஞர் ; போலீசார் விசாரணை

0 4885
சிறுகச் சிறுக நகைகளை திருடி, தனி நகைக்கடை தொடங்கிய வடமாநில இளைஞர்

சென்னையில் நகைக்கடை ஊழியர் ஒருவர், சிறுக சிறுக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி, கொளத்தூரில்  தனிக்கடையே தொடங்கியதோடு, மேலும் 15 லட்சம் ரூபாய் கேட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை ஒத்தவாடை தெருவில் ரஞ்சித்குமார் என்பவர், தமது சகோதரர்களுடன் சேர்ந்து சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த வீரேந்தர் 15 ஆண்டுகளாக கடையில் பணிபுரிந்ததால், நகைகள் வைக்கப்படும் லாக்கர் சாவியை அவரிடம் நம்பிக்கையாக கொடுத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடையில் நகைகள் குறைந்ததால் வீரேந்தர் மீது சந்தேகம் எழுந்ததாகவும், புதிய நகைகளை வீரேந்தரிடம் கொடுத்து லாக்கரில் வைக்க சொன்ன ரஞ்சித்குமார், அதில் ஒரு தங்கச்செயின் காணாமல் போனதால் வீரேந்தரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை சிறுக சிறுக திருடி, தனது சகோதரர் ரத்தன் பட்டேல் மூலம் கொளத்தூரில் பாலாஜி கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் தனி நகைக்கடையே அவர் தொடங்கியது தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.

எனினும், தங்களது குடும்பத்தில் ஒருவர் போல் பழகியதால் வீரேந்தர் மீது புகார் கொடுக்காமல், நகைகளுக்கான பணத்தை திருப்பி தந்து விடுமாறு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் மூலம் எழுதி வாங்கியதாக ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.ஆனால், ஒரு வருடமாகியும் வீரேந்தர் பணம் தராததால், பணத்தை திருப்பிக்கேட்டு ரஞ்சித்குமார் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அடியாட்களை அழைத்து வந்து ரஞ்சித்குமாரை வீரேந்தர் மிரட்டியதோடு, மேலும் 15 லட்சம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அயனாவரம் உதவி ஆணையரிடம் ரஞ்சித் குமார் இன்று புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments