நாடாளுமன்றத்தில் அமளி ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை என்றும், விவாதத்திலும் ஆர்வம் காட்டவில்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும் , பா.ஜ.க.வும் மறுத்த போதிலும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 6வது நாளாக முடங்கின.
இந்த நிலையில் பா.ஜ.க. எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செயல்படாமல் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதாக காங்கிரசை சாடினார்.
கடந்த வாரம் தடுப்பூசி பிரச்சினை குறித்து கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு தங்கள் பகுதிக்குச் சென்று, காங்கிரசின் உண்மை முகத்தை மக்களிடம் எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
Comments