நடிகை யாஷிகா மீது நடவடிக்கை.. 2 பிரிவுகளில் வழக்கு... லைசென்ஸ் பறிமுதல்..
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், அவர்தான் காரை ஓட்டிவந்தார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்த போது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் யாஷிகாவுடன் காரில் வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த்திடம் மாமல்லபுரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த் தான் என்பதும் மது அருந்திவிட்டு அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதிவேகமாக இயக்கியதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளதாகக் கூறும் போலீசார், விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்து யாஷிகா குணமடைந்த பிறகு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் போலீஸ் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விபத்திற்கு முன்பு நடிகை யாஷிகா கார் ஓட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.
Comments