கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 40,000 கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து, காவிரி ஆற்றில் 3ஆவது நாளாக வினாடிக்கு 40ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கபினியில் இருந்து வினாடிக்கு 30ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும் என மொத்தமாக 40ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34,144 கன அடி வீதமாக உள்ள நிலையில், நீர்மட்டம் ஒரே நாளில் 73 அடியில் இருந்து 75 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Comments