2024 தேர்தலில் மக்களவைத் தொகுதிகள் 1000 ஆக அதிகரிக்கப்படுமா? காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்
மக்களவையின் பலத்தை ஆயிரமாக அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த அவர் தமது நாடாளுமன்ற பாஜக சகாக்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அடுத்த 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகள் 1000 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆயிரம் எம்பிக்கள் அமரும் வகையில் மக்களவை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை அமல்படுத்தும் முன்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மக்களவை மாநிலங்களவை ஆகியவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்திருந்தார். தற்போதைய நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை 2 ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் சேர்த்து 545 ஆகும். இது 55 கோடியாக மக்கள் தொகை இருந்த போது அமைக்கப்பட்டதாகும் .
Comments