கார் விபத்தில் சிக்கிய நடிகை..! உடன் சென்ற தோழி உயிரிழப்பு நடிகை மீது வழக்குப்பதிவு

0 5715
கார் விபத்தில் சிக்கிய நடிகை..! உடன் சென்ற தோழி உயிரிழப்பு நடிகை மீது வழக்குப்பதிவு

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், அவர்தான் காரை ஓட்டிவந்தார் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நடிகை யாஷிகா ஆனந்த் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது தோழி வள்ளி ஷெட்டி பவனி மற்றும் செய்யத், அமீர் என்ற அவரது 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் சென்னை நோக்கி டாடா ஹேரியர் (TATA Harrier)காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை நடிகை யாஷிகா ஆனந்த்தான் அதிவேகமாக ஓட்டி வந்தார் என்று கூறப்படும் நிலையில், நள்ளிரவு 11 மணியளவில் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்பில் மோதிய கார் நிலைதடுமாறவே, பதற்றத்தில் காரை அவர், வலதுபுறம் திருப்பியிருக்கிறார்.

அது சாலை நடுவே உள்ள செண்ட்டர் மீடியனில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உள்ளே அமர்ந்திருந்த வள்ளி ஷெட்டி பவனி, வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் சீட் பெல்ட்டை அவர் அணியாமல் இருந்ததால் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

யாஷிகா ஆனந்த்துக்கு இடுப்பு எலும்பு முறிந்ததோடு, வலது காலும் முறிந்திருக்கிறது.

பின்பக்கம் அமர்ந்திருந்த செய்யதும் அமீரும் லேசான காயங்களோடு உயிர்தப்பிய நிலையில், மூவரும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த வள்ளி ஷெட்டி பவனியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த்திடம் மாமல்லபுரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த் தான் என்பதும் மது அருந்திவிட்டு அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

அதிவேகமாக இயக்கியதால் விபத்து என்பது தெரியவந்துள்ளதாகக் கூறும் போலீசார், விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் கார் ஓட்டுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments