கொரோனா தடுப்பு விதிகளை மறந்துவிட வேண்டாம் - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
கொரோனா இன்னும் நம்மைவிட்டுப் போகவில்லை என்பதால் விழாக்காலங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்துவிட வேண்டாம் எனப் பொதுமக்களைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, விழாக்களும் கொண்டாட்டங்களும் வரும் நேரத்தில், கொரோனா இன்னும் நம்மைவிட்டுப் போகவில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்குச் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆதரவைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போர் வெற்றி நாள், நாளை கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்த அவர், இந்தியப் படையினரின் துணிச்சலை உலகுக்கு எடுத்துக் காட்டிய அடையாளமாக அது திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
கார்கில் வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். மனத்தின் குரலுக்குச் செய்திகளையும், ஆலோசனைகளையும் வழங்குவோரில் 75 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், மனத்தின் குரலுக்கு வழிகாட்டுவோராக இளைஞர்கள் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி தன் நண்பர்களிடம் நன்கொடை பெற்று மலைப்பகுதி மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருவதையும் மோடி குறிப்பிட்டார்.கொரோனா காலத்தில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் வாழைப் பட்டையில் இருந்து நாரிழை பிரித்தெடுக்கும் பயிற்சி பெற்ற பெண்கள் ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதையும் சுட்டிக்காட்டினார்.
Comments